×

குயவன் திட்டு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட அதிகாரிகள் கால அவகாசம்

ஈரோடு, மார்ச் 17:  ஈரோடு, குயவன் திட்டு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அதிகாரிகள் கால அவகாசம் அளித்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி, 43வது வார்டுக்கு உள்பட்ட பெரும்பள்ளம் ஓடையை ஒட்டி உள்ளது குயவன் திட்டு பகுதி.  இப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், பெரும்பள்ளம் ஓடையில் கரையின் இருபுறமும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த அதிமுக ஆட்சியில் காங்கிரீட் சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, குயவன் திட்டு பகுதியில் பெரும்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை அகற்றிக் கொள்ள கடந்த 6 மாதங்களுக்கு முன் மா  நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும், அகற்றப்படும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் சித்தோடு அருகே கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடிக்  குடியிருப்பில் வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குடியிருப்புகளை காலி செய்து அங்கு செல்ல இப்பகுதி மக்கள் முன்வரவில்லை. இதனால், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 31 வீடுகளை இடித்து அகற்றிட 4 ஜேசிபி இயந்திரங்களுடன், மாநகர செயற்பொறியாளர் மதுரம் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் குயவன் திட்டு பகுதிக்கு நேற்று வந்தனர்.அப்போது, வீடுகளை இடிக்க விடாமல் மாநகராட்சி அதிகாரிகளை தடுத்து அப்பகுதியினர், முற்றுகையிட்டனர்.

மேலும், வீடுகளை காலி செய்ய முடியாது என்றும், தங்களுக்கு இப்பகுதியிலேயே புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கும், குயவன் திட்டு பகுதி மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து, குடியிருப்புகளை காலி செய்ய அப்பகுதியினர் கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுக்கு 45 நாள்கள் கால அவகாசம் அளித்தனர். இதேபோல், 44வது வார்டுக்கு உள்பட்ட ஓடை தெரு பகுதியில், பெரும் பள்ளம் ஓடையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளவும், மாநகராட்சி அதிகாரிகள் கால அவகாசம் அளித்துச் சென்றனர். 

Tags : Guayan Thatu ,
× RELATED ரயில்வே ஸ்டேஷன் எதிரே தேங்கி நின்ற கழிவுநீர் அகற்றம்